மவுனம் கலைத்து மக்களாட்சியை கவிழ்த்தார் ரங்கசாமி
- public journlists
- Mar 2, 2021
- 2 min read
புதுச்சேரி காங்கிரஸிற்கு மாற்றாக அக்கட்சியிலிருந்து வெளியேறி மாநில உரிமைகள் காப்பேன், மாநில அந்தஸ்து பெற்று தருவேன் என்று சூளுரைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை துவங்கிய திரு.ரங்கசாமிக்கு மக்கள் பேராதரவு அளித்து 2012ல் ஆட்சியை கையில் கொடுத்திருந்தாலும் பாஜக ஆதரவை மத்தியில் பெற்று இரண்டு எம்பிக்களை வைத்திருந்த போதும் புதுச்சேரி மக்களுக்கான நல்ல பல திட்டங்களை செயல்படுத்த தவறினார். இதனால் புதுவை மக்களின் வெறுப்பினை சம்பாதிக்க ஆரம்பித்தார் திரு.ரங்கசாமி. எதிர்கட்சியின் அடிப்படை கடமைகளையும் உரிமைகளையும் ஆற்றாமல் சட்டமன்றத்தில் வெளிநடப்பை மட்டுமே புதுச்சேரி பார்த்திருக்கிறது.
துணை நிலை ஆளுநராக இருந்த பதவி ஏற்ற சிறிது நாட்களிலேயே ரங்கசாமி ஆட்சியில் கட்டுப்பாடற்ற நிர்வாகம் நடந்துள்ளது என்று கூறிய கிரண்பேடி என்.ஆர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிரண்பேடியின் அழிச்சாட்டியங்களால் புதுவை மண்ணின் மைந்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிந்தும் தெரியாதது போல கண்டும் காணாமல் மவுன விரதத்திலேயே காலத்தை ஓட்டினார் திரு.ரங்கசாமி.
புதுச்சேரி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சித்து ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட திரு.ரங்கசாமியும் என்.ஆர்காங்கிரஸும் கடந்த ஐந்தாண்டுகளாக ஆளும் காங்கிரஸ் அரசை எதிரத்து ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் கூட நடத்தியதில்லை.
புதுச்சேரியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மாநில அந்தஸ்து வேண்டி வீதியில் இறங்கி போராடிய போதும், டெல்லி சென்று போராடிய போதும் என்.ஆர்.காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் இதை பற்றி வாய் திறக்கவேயில்லை. துணை நிலை ஆளுநருக்கான கூடுதல் அதிகார குவியலை பற்றி எதிர்த்து பேசியதேயில்லை.
2019 பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடை தேர்தல்களில் வெற்றிகரமான தோல்விக்கு பின்னும் திரு.ரங்கசாமியின் ராங் மூவ்களை அதன் கூட்டணி கட்சியான அதிமுகவும் எடுத்து சொல்லவில்லை. காரணம் தமிழக கட்சியான அதிமுக பாஜகவுடனான கூட்டணி நிலைபாட்டின் காரணமாக திரு.ரங்கசாமியை பகடைக்காயாக பயன்படுத்தி கொண்டனர்.
தனது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும் பலப்படுத்தாமல், புதுச்சேரி மக்களையும் கைக்குள் வைத்து கொள்ளாமல் இன்று தன் கட்சியை தேர்ந்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் பாஜகவை தேடி ஓடுவது அவர்கள் அரசியல் பிழைப்பதற்காகவே!
தன் கட்சியின் பெயருக்கு பின்னால் காங்கிரஸ் என்ற பெயரை ஒட்டி வைத்து கொண்ட திரு.என்.ஆர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களும் பாஜகவும் புதுச்சேரியில் காலூன்றுவதற்கு முக்கிய காரணமானவர் NR என்பதை யாரும் மறுக்க முடியாது.
திரு. ரங்கசாமி மிகுந்த பூரிப்புடனும் களிப்புடனும் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பாஜக மற்றும் அதிமுகவின் பேச்சை கேட்டு கொண்டு அரசியல் சாதூர்யமின்றி அதன் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் பாஜகவின் கட்டுப்பாடற்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளால் மாநிலத்தின் சுயாட்சியை வீழ்த்த காரணமானார். 2016 தேர்தலின் போது ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மீறி நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டார் என்றும் இவர் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க திராணியில்லாதவர் என்றும் கூறியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா.
மேலும், என்.ஆர்.காங்கிரஸில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களும் பாஜகவில் தஞ்சம் அடைந்து வருவதால் திரு.ரங்கசாமியின் மீது அனுதாப அலையை உருவாக்க முயல்கிறது பாஜக. அதன் வெளிப்பாடே யானத்தில் மல்லாடியின் பேச்சு. காங்கிரஸிற்கு மாற்று பாஜக அல்லது என்.ஆர்.காங்கிரஸ் என்ற மனநிலையை உருவாக்க போராடி வருகிறார்கள்.
அதானிக்கும் அம்பானிக்கும் காவடி தூக்கும் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரி, காரைக்கால், துறைமுகத்தை குறி வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது. ஒரு தேசிய தலைவர் காரைக்காலில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
பாஜக Aடீம், என்.ஆர்.B டீம், அதிமுக C டீம்களை புறக்கணித்து கார்ப்பரேட் கொட்டத்தை அடக்கி மக்களாட்சியை மலர செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ளது. தலைமுறைகளை காக்க வாக்குகளே நம் ஆயுதம்!புதுச்சேரியில் பாஜகவின் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உள்ளது என சொன்ன போது அதிருப்தி வரவில்லை. புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை என சொன்ன போது அதிருப்தி வரவில்லை.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை வைத்து மக்கள் நலத்திட்டப்பணிகளை தடுத்து மக்கள் பிரதிநிதிகள் வீதியல் இறங்கி போராடிய போது அதிருப்தி வரல! இலவச அரசிக்கு பதிலாக பணம், தீபாவளி பொங்கல் பரிசை பிச்சை போட்ட கிரண்பேடி, சுதேசி பஞ்சாலைகளை மூடியது, விவசாய விரோத சட்டங்கள் நிறைவேற்றம், தேசிய கல்வி காெள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம், புதுச்சேரியில் 9200 காலிப்பணியிடங்கள் நிரப்பாதது, சம்பள பாக்கியை போடாதது, மண்ணின் மைந்தர்களை வஞ்சிக்கும் வட மாநில அதிகாரிகள் என மோடி, பேடியின் அதிகார குவியல்களை எதிர்த்து எதன் மீதும் உங்களுக்கு அதிருப்தி வரவில்லை.

ஆளுங்கட்சியை கவிழ்க்க ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக மிரட்டி விலைக்கு வாங்கி ஜனநாயக படுகொலை செய்த போது அதிருப்தி ஆகல! பாஜக கூட்டணியில், காங்கிரஸில் இருந்து கட்சி தாவிய நமச்சிவாயம் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரிந்த பிறகும் ஆளுங்கட்சியை கவிழ்த்துவிட்டு பாஜகவுடனும் அதிமுகவுடனும் கூட்டு சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது மக்களாட்சியை கவிழ்த்து விட்டோமே என்று அதிருப்தி வரவில்லை.ஆனால் பாஜகவிற்கு எதிர்ப்பு அலை புதுச்சேரியில் மிகத்தீவிரமாய் உள்ளது என தெரிந்து பாஜகவின் வியூகத்திற்கு புது வழி அமைத்து கொடுக்க முதலமைச்சர் வேட்பாளராக என்.ஆர்.ரங்கசாமியை முன்நிறுத்தாததால் அதிருப்தி ஏற்பட்டு பாஜகவுடன் கூட்டணி கிடையாது என வெளியேறியிருப்பது சுயநலத்திற்கே என்பதை புதுச்சேரி மக்கள் அறிவர்.
கட்டுரை
Tr காயத்ரி ஸ்ரீகாந்த்
Comments